சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று திக்வெல்ல-உடதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த துவிச்சக்கரவண்டியில் பயணித்த இரு மாணவர்கள் திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சைக்கிளில் முன்னால் அமர்ந்து பயணித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல-கொண்டெனிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய பாடசாலை மாணவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் நடத்திய விசாரணையில் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தைமையே விபத்துக்கான காரணமென தெரியவந்துள்ளது.