ஜனநாயக போராட்டத்தின் பலத்தால் அரசாங்கத்திற்கு இறுதி செய்தியை வழங்குவோம்.

0
246

நாட்டினதும் குடிமக்களினதும் அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து ஒட்டுமொத்த நாட்டையும் மிகக் கடுமையான சோகத்தில் தள்ளியுள்ள அரசாங்கத்திற்கு இறுதிச் செய்தியை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ  தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தூரநோக்கற்ற, திமிர்பிடித்த மற்றும் தன்னிச்சையான ஆட்சியின் மூலம் ஒரு துயரமான நிகழ்காலத்தையும் இருண்ட எதிர்காலத்தையும் மட்டுமே நாட்டிற்கு உரித்தாகியுள்ளது.இதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கட்சி சார்பற்ற சிவில் சமூகத்திலும் அரசாங்கத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்பு எழுந்தது.

அதன் தீர்க்கமான தருணமாக காலிமுகத்திடலின் 90 நாள் மக்கள் போராட்டத்தை கருத முடியும். பென்சில் அல்லது தூரிகையுடன் எதிர்ப்புச் பதாகைகள் மாத்திரம் ஏந்தியபடி நீதி மற்றும் மனிதாபிமானத்தின் பெயரால் உன்னதமான எதிர்பார்ப்புகளோடு போராடும் மக்கள் தலைமுறைக்கு எதிராக அடக்குமுறையையும் அச்சுறுத்தலையும் மிருகத்தனமான கொடுங்கோல் ஆட்சியினால் மாத்திரமே பிரயோகிக்க முடியும்.

ஆனால் அதை இந்த அரசு செய்தது. அதிகாரம் மிக்க நிறைவேற்று ஜனாதிபதியையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்தையும் நான்கு சுவர்களுக்கு இடையில் சிக்க வைப்பதில் இந்த போராட்டம் வெற்றி பெற்றது.

இந்த மாபெரும் போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்து, போராட்டத்தின் குறிக்கோள்களும் நோக்கங்களும் நமது இலக்குகள் மற்றும் நோக்கங்களுடன் ஒத்துப்போனதால், அவர்களின் போராட்டம் எங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றது.

நாளை (09) மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அந்த மக்கள் போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பூரண ஆசியையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம்.

இந்நிலையால் கோபமடைந்துள்ள அரசாங்கம் சிறுப்பிள்ளைதனமான மற்றும் மிருகத்தனமான எதிர்வினைகள் மூலம் இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளுடன் வெறித்தனமான மோதலில் ஈடுபட முயற்சிக்கின்றது.

இனவாதம், மதவெறி, தீவிரவாதம் என்ற தனக்குப் பழக்கமான விஷத்தைப் பயன்படுத்தி இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை களங்கப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இத்தருணத்தில் உருவெடுத்திருப்பது முழு நாட்டு மக்களின் எதிர்ப்புப் போராட்டமும் வேதனையுமே ஆகும். போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமையை எதிர்க்க எந்த சக்திக்கும் உரிமை இல்லை.

மக்களின் துயரம் மற்றும் எதிர்ப்புக்கு எதிராக அரச வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து பாதுகாப்புப் படையினரையும் கேட்டுக்கொள்கிறோம். பாதுகாப்புப் படைகள் பாதுகாக்க வேண்டியது குடிமக்களையேயன்றி அரசாங்கத்தை அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

அரசின் தந்திர, கோழைத்தனமான இலக்குகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல், அகிம்சையை மனதில் கொண்டு இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்பதுடன் இந்த ஜனநாயக போராட்டத்திற்காக எமது பூரண பலத்தை வழங்குவோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here