ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் உரிய காலத்துக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான நிதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக் குழுவைச் சார்ந்துள்ளது என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அரசு இணைந்து செயற்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் (தற்போதைய ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடவுள்ளனர் என்று அக்கட்சிகள் அறிவித்துள்ளன.