ஜனாதிபதியின் பிறந்த தினம் இன்று

0
305

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 20ஆம் திகதி தனது 73 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்ஷவின் புதல்வரும் இலங்கையின் 5 வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ 1949 ஆம் ஆண்டு பிறந்தார்.

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். அவர் 1971 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். தனது இராணுவ சேவையின்போது அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகளில் முதுமானிப் பட்டமொன்றைப் பெற்றதோடு பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் உயர்தரப் பயிற்சிகள் பெற்றார்.

யுத்தகாலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆணையிட்டு நடத்தியதால் அவருக்கு யுத்தத்தில் தீரமும் சிறப்பும் காட்டியமைக்கான ரணவிக்ரம பதக்கம் மற்றும் ரணசுர பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டன.

யுத்தத்தின்போது காட்டிய வீரத்திற்காக அவர் இலங்கையின் சனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்றார்.
1991 இல் ஒரு லெப்டினன் கேர்ணலாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயின்று அதன்பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு கலிபோர்னிய, லொயலா சட்டக் கல்லூரியில் ஒரு தகவல் தொழில்நுட்ப தொழில்வாண்மையாளராகப் பணியாற்றி 2005 இல் இலங்கைக்குத் திரும்பினார்.
2005 நவம்பரில் அவரது சகோதரர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி ஒப்படைக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் என்ற தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஸ்ரீ லங்கா பொதுசனப் பெரமுனக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு ஆரம்பித்த அவரது முனைப்பான அரசியல் பிரவேசத்திற்கு முன்னர், அவர் நாட்டின் சிறந்ததோர் எதிர்காலத்தின் மீது பற்றுறுதி கொண்ட தொழில்வாண்மையாளர்களை ஒன்றுதிரட்டிய ஒரு அமைப்பான ‘வியத்மக’ அமைப்பையும் பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர்களது விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான ‘எலிய’ அமைப்பையும் நிறுவினார்.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ 2019 நவம்பர் 16 ஆம் திகதி அநுராதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ருவன்வெலிசேய தூபி புனித தலத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்தத் தேர்தலில், 1.3 மில்லியன் வாக்குகளை அதிகமாகப் பெற்றதோடு, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 52.25 வீதத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் ஸ்ரீ லங்கா பொதுசனப் பெரமுனக் கட்சியில் போட்டியிட்டார். வெற்றி பெற்றார். இன்றும் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அயோமா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு மனோஜ் என்ற ஒரு மகன் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here