ஜப்பான் வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் கூறியது என்ன?

0
170

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் ஜப்பான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் இதற்கமைய எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை இலங்கையில் மேற்கொள்வது குறித்து ஆராய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று (27) காலை டோக்கியோவில் சந்தித்து கலந் துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார்.

அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க இதன்போது வருத்தம் தெரிவித்தார். அந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் ஜப்பான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here