தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
‘மொட்டு கட்சியின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதை தடுப்பதற்கென்று த. தே. கூ. ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?“ என அவர் பதிவிட்டுள்ளார்.