அனைத்துலக அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்த சீனாவின் ‘யுவான் வாங் 5’ பாதுகாப்புக் கப்பல் திட்டமிட்டபடி எதிர்வரும் 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையாது என்று உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கள வார இறுதி ஏடொன்று வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவின் ‘யுவான் வாங் 5’ சிறிலங்காவுக்கு வருவதற்கு கடந்த ஜூன் மாதம் இலங்கை  பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வ அனுமதி வழங்கியிருந்தது.

எதிரி நாடுகளின் ஏவுகணை தளங்களை கண்காணிக்கும் வகையில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ‘யுவான் வாங் 5’ கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சும் தனது ஆட்சேபனை குறித்து புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பேணி இந்த நெருக்கடியை தீர்க்கும் வகையில் கம்போடியாவில் இந்திய மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த பேச்சுக்களின் போது அங்கு மேற்கொள்ளப்பட்ட தெளிவுபடுத்தல்களின் படி சீன போர்க் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வராது என்று அறிய முடிகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.