தும்புத்தடியால் மாணவியை தாக்கிய அதிபரே மீண்டும் எமது பாடசாலைக்கு வேண்டுமென கோரி ஆர்ப்பாட்டம்

0
341

போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை, பத்தனை – போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் இன்று (03.10.2022) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதனை வழங்க மறுத்த மாணவியொருவரை தாக்கினார் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போலியானது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுத்து, தமது பாடசாலை முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்தனர்.

பாடசாலைக்கு முன்பாக தலவாக்கலை – நாவலப்பிட்டிய பிரதான வீதியில் போகாவத்தை நகரத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தினை சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

(கிரிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here