முழு சமூகத்தையும் பிளவுபடுத்தும் தேசிய பாடசாலைக் கருத்திட்டத்துக்குப் பதிலாக, புவியியல் அமைவிடம் மற்றும் மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முன்னணி பாடசாலைகளுடன் கூடிய பாடசாலைக் கொத்தணிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இந்த கொத்தணி பாடசாலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முன்னணி பாடசாலைகள் முதன்மையாக செயல்படுமென்றும் அமைச்சர் கூறினார். கொழும்பு கல்வி வலய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்துக்குள், நாடு தழுவிய ரீதியில் சுமார் 1,200 பாடசாலைகளை அடையாளம் காண முடியுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு கொத்தணியிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான முகாமைத்துவச் செயற்பாட்டின் ஊடாக, பௌதீக மற்றும் மனித வளங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு செலவு குறைந்த மற்றும் திறமையான பொறிமுறையொன்று அமைக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

இங்கு பாடசாலைகளை அல்லது வளங்களை மாற்றவோ அல்லது பிரித்தறியவோ முடியாது, பௌதீக மற்றும் தொழில்நுட்ப முறைகள் மூலம் பரிமாற்றம் மட்டுமே நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.