தோட்டத் தொழிலாளர்களின் தின சம்பள உயர்வுக்கும், சம்பள முறைமைக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறோம். இதற்கு தோட்ட கம்பனிகளின் ஒத்துழைப்பு அவசியமானதாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை காலமும் தொழிற்சங்கமாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை பகிரங்கப்படுத்தவில்லை. ஆயினும், நாம் பூதாகரமாக விமர்சிக்கப்பட்டே வருகின்றோம்.

அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தோட்ட கம்பனிகள் அனுமதித்தன. இதனைத் தவிர அவை எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. எல்லா திட்டங்களும் அமைச்சின் கீழ் இயங்கிவரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலமாகவே அமுலாக்கப்பட்டு வந்துள்ளன.

மேலும் இவ்வாறிருக்க தோட்ட கம்பனிகளே 39,000 வீடுகளை நிர்மாணித்துள்ளதாகவும் இப்போது எழுந்துள்ள உணவு நெருக்கடியை தீர்ப்பதற்கான திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் பல செய்திகள், கட்டுரைகள் ஆகியவை வாயிலாக அறிய முடிகிறது.

அத்தோடு ஜீவன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது அரசு மூலம் நிறைவேற்றிய திட்டங்களையும் பெருந்தோட்ட கம்பனிகளே அமுலாக்கின என்ற விடயமும் இப்போது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.