நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ள நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானுஓயா பிரதான நகரில் மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்தின் அருகில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை செய்து குப்பை கொட்டுவதனை நிறுத்தினர். முற்றிலும் அகற்றப்பட்ட குப்பைகளை மீண்டும் அவ்விடத்தில் கொட்டுவதால் நானுஓயா பிரதான நகரம் அசுத்தப்படுவதாகவும் , சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வீதியில் பயணிக்கும் பொது மக்களும் , மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் வெளிநாட்டு,உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகளினால் அதிகமாக விரும்பப்படும் நகரமாகும்
நுவரெலியா பகுதிக்கான ரயில் சேவையின் மத்திய நிலையமாகவும் காணப்படுகின்றன நானுஓயா நகரம் வரலாற்று ரீதியாகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

நானுஓயா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களில் ,வீடுகளில் சேகரிக்கப்படும் அழிகிய உணவு பொருட்கள் ,மாமிசங்கள் ,எலும்புத்துண்டுகள் ,எளிதில் மக்கிப்போகாத பொலித்தின் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்களை இவ்விடத்தில் நுவரெலியா பிரதேச சபையின் மூலம் குப்பைகளைச் சேகரித்து வாகனத்தின் மூலம் கொட்டப்படுகின்றது இதனால்
குப்பைகளுடன் மழை நீர் சேரும் போது சாக்கடைகள் நிறைந்த குப்பை நீராக மாறுகின்றன ,மொத்தத்தில் மண்,நீர் என்று மொத்த சுற்று சூழலுமே நச்சாக மாறுகின்றன .

இந்த நிலையில் அழகான இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக இப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வீசும் துர்நாற்றங்களினால் மனம் நொந்து வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது .

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியோரம் நானுஓயா மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்திற்கு அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றமையால் நாய்கள் , பறவைகள் அவற்றை நாலாபுறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதை ,பிரதான பாதை அலங்கோலமாகக் காட்சி தருகின்றது ,மற்றும் வாகனம் சாரதிகளும் பாதிக்கப்படுகின்றன குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாததால் அவை துர்நாற்றம் வீசுவது மாத்திரமன்றி, ஈக்களின் பெருக்கமும் ,நுளம்புகளின் பெருக்கமும் சமீப தினங்களாக அதிகரித்து விட்டது.

இதனால் டெங்கு நோய்க்கு நிகராக, ஈக்களால் பரப்பப்படும் வாந்திபேதி, நெருப்புக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற வியாதிகளும் தொற்றத் தொடங்கி விடக் கூடிய ஆபத்து உள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றன

அதேவேளை இரவு வேளைகளில் இந்த குப்பைகளை நாடி பன்றிகள் அதிகமாக வருகின்றமையினால் இரவு வேளையில் இப்பகுதியில் பயணிப்பவர்கள பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்

எனவே குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களும் , மாணவர்ககளும் கோரிக்கை விடுக்கின்றன.

செ.திவாகரன்