இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது சர்வதேச  ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதுடன் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெறும் பட்சம் தொடரையும் கைப்பற்றும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக  நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலியாவின் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், அணி தலைவர் பிஞ்ச் 62 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கையின் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.  292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க 137 ஓட்டங்களையும்,  குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை (21.06.2022) கொழும்பு ஆர்.பிரேதமாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.