An 8 week Pointer puppy biting the trouser leg of its owner

நீர்வெறுப்பு நோயால் (விசர் நாய்க்கடி நோயால்) கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் மருத்துவர் எல். டி. கித்சிறி இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

95 வீதமான நோய்த் தொற்றுகள் நாய் கடிப்பதால் ஏற்படுகின்றன. நாய்க்குட்டிகள் மூலம் குறித்த நோய் பரவி அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஆறு மாதங்களில் 5 இலட்சம் நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம்.

அத்துடன், நாட்டில் 20 முதல் 30 மில்லியன் நாய்கள் உள்ளன. இருப்பினும் ஆண்டுக்கு சுமார் 11 இலட்சம் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

70 வீதமான நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதன் மூலம் குறித்த நோய் பரவுவதை குறைக்க முடியும் நீர்வெறுப்பு நோயால் வருடாந்தம் 20 தொடக்கம் 30 வரையான மரணங்கள் ஏற்படுகின்றன. வருடம் தோறும் ஆறு வாரங்களுக்கு மேல் உள்ள அனைத்து நாய்களுக்கும் விசர் நாய் கடி தடுப்பூசி போடுமாறு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

விசர்நாய் கடிக்கு எதிராக நாய்களுக்கு தடுப்பூசி போடாததும் மற்றும் நாய் கடித்த பின்னர் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாததும் இறப்புக்கான முக்கிய காரணங்களாகும். விலங்கு கடித்த உடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் 100வீதம் குறித்த நோயில் இருந்து முழுமையாக குணமடைய முடியும். விசர் நாய் கடிக்கான (நீர்வெறுப்பு நோய்) தடுப்பூசிகள் அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக பெற முடியும் என்றார்.