நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை செல்லும் A7 பிரதான வீதி காபட் இட்டு  புனரமைக்கப்பட்ட போதிலும் டெஸ்போட் , கிரிமிட்டி வழியாக உரிய போக்குவரத்து சேவையின்றி  பாடசாலை செல்லும் மாணவர்களும் , பொது மக்களும் தமது தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் ,  சில பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது  செல்வதாகவும் இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வீதியில் தினமும் பயணிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், அன்றாட தொழிலுக்குச் செல்வோர் சீரான பஸ் போக்குவரத்து இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
பேருந்து சாரதிகள் நடத்துனர்களது அசண்டையீனத்தால் பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்தில்  பாடசாலை செல்லமுடியாத நிலை உள்ளதாகவும் ,  பயணிகள் மாணவர்களை ஏற்றாது பயணிக்கும் பேருந்துகளை உரிய சேவையை வழங்க உரிய அதிகாரிகள் பணிக்குமாறும் இல்லையெனில் தனியான பாடசாலை சேவை ஏற்படுத்தி தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
இவ் போக்குவரத்து பிரச்சினை காரணமாக நுவரெலியா பிரதேச சபை அபிவிருத்தி கூட்டம் , மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியும் நடைமுறைக்கு வராத காரணத்தால் நானுஓயா பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2017 புதிதாக நேர அட்டவணை ஒன்றை நுவரெலியா பிரதேச செயலக கட்டடத்தில் பிரதேச செயலாளர் , இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான முகாமையாளர் , ஹட்டன் – நுவரெலியா தனியார்  போக்குவரத்து சபைக்கு உரித்தான அதிகாரிகள் என பலர் ஒன்றினைந்து இவ் போக்குவரத்து பிரச்சினையை  முடிவிற்கு கொண்டுவந்தனர்.
இருந்தும் கடந்த மாதங்களில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து பேருந்துகளும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் செல்கின்றன நுவரெலியாவில் இருந்து டெஸ்போட் வழியாக தலவாக்கலை வரை சுமார் 30.8 கிலோமீட்டர் தூரத்தை கொண்ட வீதியில் செல்லாமல்  நானுஓயா குறுக்கு வீதியில் செல்வதனால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் குறைவாகவும்  இலகுவாகவும், விரைவாகவும் செல்லக்கூடியதாக உள்ளமையால் அனைத்தும் பேருந்து உரிமையாளர்கள் தமது சுய இலாபத்திற்காக குறுக்கு வீதியினை மாத்திரம் பயன்படுத்தி வருகின்றன .
இது தொடர்பாக கடந்த வாரம் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பேசப்பட்டது . இதனை தொடர்ந்து நுவரெலியா – தலவாக்கலை பிரதான சுற்று வீதியில் நேர அட்டவணைப்படி பேருந்துக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் தலைவர் எஸ்.பி திசானாயக்க உத்தரவு இட்டு கடிதம் மூலமாக நுவரெலியா தனியார் பேருந்து காரியாலயத்திற்கு தெரிவித்தப்போதிலும் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை .
பேருந்து சாரதிகள் , நடத்துனர்களின் விருப்பத்திற்கு அமைவாக நானுஓயா ரதால்ல குறுக்கு வீதியினை மாத்திரம் பயன்படுத்தி வருகின்றன இதனால் நானுஓயா டெஸ்போட் வழியாக சுமார் ஏழு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 28 ஆயிரம் பொதுமக்கள் உரிய நேரத்திற்கு பேருந்து சேவையின்றி பேருந்து தரிப்பிடத்தில் காத்திருக்க வேண்டியிருப்பதாக அங்கலாய்க்கின்றனர்
எனவே இப்பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு உரிய நேரத்திற்கு சீரான பேருந்து சேவையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 செ. திவாகரன்