அண்மையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பசில் தனது வெற்றிடத்துக்கு இருவரின் பெயரை முன்மொழிந்த போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்து தம்மிக்கவை நியமித்துள்ளதாக சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான சிங்கள வார ஏடு ஒன்று தனது பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பதவி விலகுவதற்கு முன்னர் பசில் ராஜபக்ச அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவையும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் தனித்தனியாக சந்தித்தார். அங்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தனது சகோதரர்களிடம் தெரிவித்தார்.
பொருத்தமான வேட்பாளரை நியமிக்குமாறும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாம் தனிப்பட்ட முறையில் யாரையும் நியமனம் செய்யாவிட்டாலும் கட்சியில் இருந்து ரேணுகா பெரேரா அல்லது சிறிபால அமரசிங்க ஆகிய இருவரையே முன்னிறுத்துவேன் என்று அரச தலைவரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கொண்டு வர விரும்பினார். தம்மிக்கவினால் முன்வைக்கப்பட்ட டொலர் தேடுதல் திட்டங்களை அரச தலைவர் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதன்படி, தம்மிக்க பெரேராவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு அரச தலைவர் பசில் ராஜபக்சவிடம் முன்மொழிந்தார். இறுதியாக அரச தலைவரின் பிரேரணைக்கு பசில் உட்பட அனைவரும் இணங்க நேரிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கட்சி இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, தம்மிக்க பெரேரா கட்சி உறுப்புரிமையைப் பெற வேண்டியிருந்தது. இதன்படி பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளுமாறு தம்மிக்கவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அதன்படி கட்சி அலுவலகம் சென்று கட்சி உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார். வியாழக்கிழமை அளவில், தம்மிக பெரேரா பாராளுமன்றத்துக்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.