பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துனர் பெண் பயணியொருவரிடம் கூறியதையடுத்து குறித்த பெண் நடத்துனரை தாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸில் கிரிபத்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏறியுள்ளார். குறித்த பெண்ணிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துனர் கோரியிருக்கின்றார்.

இதனையடுத்து மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸின் நடத்துனரை உதைத்ததில் அவர் பஸ்ஸிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பஸ்ஸிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணை பிடித்து கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 34 வயதான குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் பல வருடங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.