அட்டன் – தலவாக்கலை மார்க்க அரச பேருந்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதில்லை – அசௌகரியத்திற்குள்ளாகும் மாணவர்கள்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் செல்வதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரீஜ் கல்லூரியின் மாணவர்களுக்கு பாடசாலையின் கற்றல் நடவடிக்கை நிறைவடைந்த பின் பேருந்திற்காக நீண்டநேரம் மாணவர்கள் காத்திருந்ததாகவும் அதன் போது பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நிறுத்தாமல் மாணவர்களை நடுவீதியில் விட்டு சென்றதாக குறித்த மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பெருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றோர் பிள்ளைகளின் கல்வியை கருத்திற்கொண்டும் அரச பேருந்துக்கான மாதாந்த பயண அட்டை பெற்றுக்கொடுத்துள்ள போதிலும் பஸ் சாரதிகள் இவ்வாறு தொடர்ந்து மாணவர்களை ஏற்றிச்செல்லாது செல்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும்,ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.