ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 09 சந்தேகநபர்களையும் எதிர்வரும்  13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை நீதியரசர்கள் மூவரடங்கிய குழு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இன்றையதினம் மன்றில் ஆஜராகியிருந்த குறித்த சாட்சியாளரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010 ஜனவரி 24ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.