பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு, அதே பிரிவில் கடமையாற்றும்  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலாத்காரமாக நெற்றியில் முத்தமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்தப் பணியகத்தின் அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதிவான்  கேமிந்த பெரேராவுக்கு அறிவித்தனர்.

கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி, குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், கடமை நிமித்தம்  அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தபோது,  வழியில் நின்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பின்னால் வந்து, தலையை பிடித்து, தன்னை அவர் பக்கம் திருப்பி நெற்றியில் முத்தமிட்டதாகவும் அதனால் தனக்கு பெரும் அச்சமும்  தலை குனிவும் ஏற்பட்டதாகவும்   சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டில்   பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குறிப்பிட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இந் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.