பொதுப் போக்குவரத்தில் பயணிகளைக் கவர விஷேட திட்டம்

0
245

பயணிகளைக் கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேவேளை, பொதுப் போக்குவரத்துக்கு அதிக தேவை இருப்பதால், அதற்கு வசதிகளை வழங்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

புகையிரதங்கள் மற்றும் பேருந்துகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்கும் பொறிமுறையொன்றின் அவசியம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு இரவு வேளைகளில் எரிபொருள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Park & Drive முறையை விரிவுபடுத்தவும், அதற்காக வாகனத் தரிப்பிட கட்டணத்தைக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஒன்றிணைந்த நேர அட்டவணை முறையை குறுகிய பயண சேவைகளுக்கும் பயன்படுத்த முன்மொழியப்பட்டது. அலுவலக சேவைகளை இலக்காகக் கொண்டு புதிய புகையிரத சேவைகளை தொடங்கவும் தற்போது இயக்கப்படும் புகையிரதங்களுக்கான பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • Park & Drive முறைமைக்கு முன்னுரிமை…
  • அலுவலக சேவைகளை இலக்காக கொண்டு புதிய புகையிரத சேவைகள்…
  • குறுகிய தூர பயண சேவைகளுக்கும் இ.போ.ச, தனியார் பேருந்து சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த அட்டவண…
  • .போ.சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காண இணக்கம்…
  • உணவுப் பயிர்ச் செய்கைக்காக புகையிரத காணிகளை குத்தகைக்கு விடத் தீர்மானம்…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காண இணக்கம் காணப்பட்டதுடன், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான ஒதுக்கப்பட்ட நிலங்களை ஓராண்டுக்கு உணவுப் பயிர்ச் செய்கைக்கு குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்கள் மூலம் விவசாய சங்கங்களுக்கு குறித்த காணிகளை மிகக்குறைந்த வரிவிகிதத்தில் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி, துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here