போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்-கைதுகளுக்குக் கண்டனம் ;மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

0
282
கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டு வரும் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், கைதுகள் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியதுமான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிவில் அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் க.லவகுசராசா தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  அமைதியான போராட்டக் காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்;மையாகக் கண்டிக்கின்றோம், போராட்டக் காரர்களைக் கைது செய்வதை நிறத்துக, அமைதி வழியில் போராடியவர்கைள விடுதலை செய், பேச்சு சுதந்திரம் எமது அடிப்படை உரிமை, போராட்டக் காரர்கள் மீது வன்முறை வேண்டாம், ஒன்று கூடுவது எமது உரிமை போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆhப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இவ்விக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

29 ஆவணி 2022 ஆகிய இன்றைய நாளில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாமும், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதிவழிப் போராட்டக்காரர் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அமைதிவழிப் போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளரையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தாக்குவதை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை கோருகிறோம். அத்துடன், தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடன் விடுவிக்குமாறு நாம் அரசை வேண்டுகிறோம்.

இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள், ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில், நாம் பெருமிதமடைகிறோம். தமிழின அழிப்புக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச்செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம். முழுநாடும் ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தது. எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகாரமாற்றத்தின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள், அதே மக்களுக்கு எதிராக திரும்பி அந்த மக்களின் குரலையே நசுக்குவது சந்தர்ப்பவாதமாகும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான, ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் நாட்டை மீளவும் ஒரு இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்லுமென நாம் அஞ்சுகிறோம்.

எனவே, மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள மீறுவதை உடன் நிறுத்துமாறும், ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் நாம் இலங்கை அரசைக் கோருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here