போராட்டம் உதாசீனம் செய்யப்பட்டால் பின்விளைவுகளுக்கு மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனமே பொறுப்பு

0
256
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ்.
மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனத்தின் தொழிலாள விரோத நடவடிக்கையை எதிர்த்து அமைதியான முறையில் தொழிற்சங்க போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மஸ்கெளிய பெருந்தோட்ட நிறுவனம் நடந்துகொண்டால் ஏற்படும் விளைவுகளுக்கு மஸ்கெளிய பெருந்தோட்ட நிறுவனமே பொறுப்பாகும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. வழமையான பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வில்லை. தொழிற்சாலைகளில் உற்பத்தி வழமையாக நடைபெறுகின்றது. பொதி செய்யும் வேலைகள் கூட தடுக்கப்படவில்லை. ஆனால் விற்பனைக்காக தேயிலை பொதிகளைக் கொண்டு செல்வதற்கு முன் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கோருகிறோம். இது மிக மிக சாதாரண தொழிற்சங்க நடவடிக்கையாகும்.
இந்நிலையில் அபுகஸ்தன்ன தோட்டத்தில் பொதி செய்யப்பட்ட தேயிலையை கொழும்புக்கு கொண்டு செல்ல தோட்ட நிர்வாகம்
முற்பட்டிருக்கிறது. இது தோட்டத் தொழிலாளர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டியது கம்பெனிகளின் கடமையாகும்.
தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு குறைவாக பறிக்கப்படும் கொழுந்து கிலோவிற்கு 50 ரூபா வீதம் கொடுக்கிறார்கள். தற்போது தேயிலை செடிகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பெருந்தோட்ட நிறுவனம் எதிர்ப்பார்க்கும் தேயிலைக் கொழுந்தை பறிக்க முடியாது. தேயிலை செடிகளுக்கு உரமிடப்படுவதில்லை.
முறையாக மருந்து தெளிக்கப் படுவதில்லை. புட்கள் அகற்றப்படுவதில்லை. இதற்கிடையில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களே புற்களை அகற்றிக் கொண்டு கொழுந்தையும் பறிக்க வேண்டும் என்ற பணிப்புரை வழங்கப்படுகிறது. இதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் புறக்கணித்து வருகின்றது .
இந்நிலையில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வதை விட வேறு வழி இல்லை.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கடும்போக்கு அடக்குமுறைக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் அமைதியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்.
அதை விடுத்து தொழிலாளர்களை ஆத்திரமூட்டி அதன்மூலம் அமைதியற்ற நிலையை ஏற்படுத்த முற்பட்டாள் அதற்கான முழு பொறுப்பையும் மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை பொதி செய்யப்பட்ட தேயிலையை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவை நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here