மலையகத் தமிழர்களை சமூகத்துடன் இணைக்கும் குழுவை  ‘ஜனாதிபதி  ஆணைக்குழு’ வாக அமையுங்கள்·

0
461

மலையகத் தமிழர் சமூகம் இலங்கையில் வேரூன்றி இருநூறு ஆண்டுகளைக் கடக்கும் இந்த காலப்பகுதியிலாவது, அவர்களை  சமூகத்துடன் இணைக்கும் முயற்சியாக ஒரு குழுவை அமைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பது வரவேற்கப்படக்கூடியதே.

இந்த அறிவிப்பின் அடுத்த கட்ட நகர்வு எத்தகையது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது இலங்கை தேசிய இனங்களில்  ஒன்றாக மலையகததமிழர் சமூகம் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைவதுடன் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் ஓர் ஆணைக்குழுவை அமைக்கக் கோரிய எனது வேண்டுகோளையும் நியாயப்படுத்துகிறது.

எனவே  மலையகத் தமிழர்களை சமூகத்துடன் இணைக்கும் குழுவை அமைக்கவு ள்ளதான ஜனாதிபதியின் அறிவிப்பானது  ‘ஜனாதிபதி  ஆணைக்குழு’ வாக அமைவதே  சிறந்தது. அதனை வலியுறுத்தி அவரிடம் எழுத்து மூல கோரிக்கை வைக்கவுள்ளோம் என முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழர்களை சமூகத்துடன் இணைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்திருக்கும் அறிக்கை தொடர்பில், மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதன் பின்னர் நவம்பர் மாதமளவில்  அப்போதைய நிறைவேற்றதிகார  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதி செயலகத்தில் கூட்டியிருந்த  சர்வகட்சி பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு நான் முன் வைத்த கோரிக்கை; மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உத்தியோகபூர்வமாக பதிவு செய்ய ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ ஒன்றை அமைக்க வேண்டும் என்பதாகும்.

அதனை அமைப்பதாக உறுதி அளித்தாலும் அதனை அவர் செய்யவில்லை. அப்படி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்குமாயின் எமது மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கக் கூடிய விடயங்கள் என்னென்னவாகவெல்லாம் இருந்திருக்கும் என்ற ஒரு எண்ண வெளிப்பாடாகவே எனது “மலைகளைப் பேசவிடுங்கள்” எனும் கட்டுரைத் தொடர் அமைந்தது. அதுவே பின்னர் நூலாகவும் வெளிவந்தது.

உறுதியளித்த தனியான ஆணைக்குழு அமைக்கப்படாத போதும், தேர்தல் முறைமை மாற்றத்திற்காக அப்போது உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் ஓர் அங்கமாக அமைக்கப்பட்ட ‘மக்கள் கருத்தறியும் குழுவான லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவினரிடம் மலையகத் தமிழ் மக்கள் தமது அதிகளவான முன்மொழிவுகளை தேர்தல் முறைமை மாற்றத்திற்கும் அப்பால் சென்றும் முன்வைத்தனர்.எனினும் அந்தக் குழுவின் இறுதி அறிக்கையில் மலையகத் தமிழர்களின் கருத்துக்கள் உரிய முறையிலும் அளவிலும் பிரதிபலித்திருக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து அமைந்த கோட்டபய ராஜபக்க்ஷ அரசாங்கத்தில் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் முறை மாற்றத்திற்கான தினேஷ் குணவர்தன தலைமையிலான தெரிவுக் குழுவுக்கும் மலையகத் தமிழ் மக்கள் பல முன்மொழிவுகளை வழங்கி இருந்தனர். அந்தத் தெரிவுக் குழு வின் கீழ் அமைக்கப்பட்ட தொழிநுட்ப குழுவில் மலையகத் தமிழ் மக்கள் நலன் கருதி சமூக செயற்பாட்டாளர் பா. கௌதமன் நியமிக்கப்பட்டார். இருந்தும் அந்தத் தெரிவுக் குழு அறிக்கையும் உரிய முறையில் மலையகத் தமிழர்களின் கோரிக்கைகளை உள்வாங்கியதாகக் கூறுவதற்கு இல்லை. கௌதமனும் அதில் அதிருப்தியையே வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையிலேயே தேர்தல் முறைமை மாற்றங்களை எல்லாம் கடந்து மலையகத் தமிழர்களை சமூகங்களுடன் இணைக்கும் ஒரு குழுவை அமைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விடுத்திருக்கும் அறிவிப்பு மலையகத் தமிழர் சமூகம் குறித்து ஏனைய சமூகங்களினதும்  தேசிய கவனத்தையும் பெறவேண்டிய ஒன்றாக உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அறிவிப்பை நேர்மறைச் சிந்தனையாகவே ( positive ) பார்க்கும் அதேநேரம், இதனை ஒரு சாதாரண குழுவாக அல்லாமல் அதிகாரம் மிக்க  ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ வாக அமைக்குமாறு ஒரு கோரிக்கையாக மலையக அரசியல் அரங்கம் சார்பாக எழுத்து மூலமாக முன்வைக்கவுள்ளோம்.

மலையகத் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதற்கு முன்னதாக அவர்களின் பிரச்சினைகளை முறையாகவும் உத்தியோகபூர்வமாகவும் பதிவு செய்யும் குழுவாக அந்த ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ அமைய வேண்டும்  என வலியுறுத்தும் எனது “மலைகளைப் பேசவிடுங்கள்”  எனும்  கோரிக்கை யும்   இதுவே  என்றும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here