மலையக மக்களின் பிரச்சனை தீர்க்க விசேட ஆணைக்குழு அல்லது ஜனாதிபதி செயலணி வேண்டும் – உதயா எம்.பி

0
258

மலையக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை அடிப்படையாககக் கொண்டு விசேட ஆணைக்குழு அல்லது ஜனாதிபதி செயலணி அல்லது பாராளுமன்ற குழு நியமிக்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் இன்று ஏழை பணக்காரர், என அனைத்து தரப்பினரையும், தராதரம்
பாராது, பாதித்துள்ள பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் – விசேடமாக இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்ட மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும், இந்த உயரிய சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களால் பிரேரணை ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி நிலை இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டாலும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் வெளிச்சத்திற்கு
வருவதில்லை. ஆனால், இம்முறை ஐக்கிய நாடுகள் சபை வரை எமது பெருந்தோட்ட மலையக மக்களின் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலே அதிகளவான உழைப்பை வழங்கி – மிகவும் குறைந்த சம்பளம் பெரும் பெருந்தோட்ட மக்கள் குறித்து இந்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு, கொரோனா வைரஸ் பரவல் நாட்டின் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற காரணிகளால் மலையக மக்களின் வாழ்வாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வருமானம் குறைவு என்ற காரணத்தால் மலையக மக்கள் கல்வி, சுகாதாரம், போஷாக்கு, தொழில்துறை, தொழிநுட்பத்துறை என பல துறைகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆகவே, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தேயிலை விலை உயர்வு போன்றவற்றின் அடிப்படையில் உடனடியாக அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதுமாத்திரமன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத அதேவேளை மலையக பகுதிகளில் உரிய தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முறையான வேலைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

தற்போது, வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க அரசாங்கம் திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. அதில் பெருந்தோட்ட மலையக மக்கள் அதிகம் உள்ளீர்க்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அரசாங்கம் முன்னெடுக்கும் நிவாரணத் திட்டங்களில் தோட்டத்தில் தொழில் புரிபவர்கள் என்று கூறி பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்படுவது வழக்கமாகி வருகிறது.

சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் கொரோனா நிவாரண திட்டத்திலும் இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் செய்யாதவர்கள் என பிரிவுகளை ஏற்படுத்தி பாராபட்சம் காட்டப்பட்டது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சமுர்த்தி கொடுப்பனவிலும் மலையக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
உதாரணமாக, கண்டி மாவட்டத்தில் 96,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கப்படுகையில் அதில் 7,600 குடும்பங்கள் மாத்திரமே பெருந்தோட்ட மக்கள் அதேபோல பதுளை மாவட்டத்தில் 75,000 பேரில் 10,500 மாத்திரமே
பெருந்தோட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் 53,000 குடும்பங்களில் பெருந்தோட்ட மக்கள் 16,000 மாத்திரமே.
ஆகவே, பெருந்தோட்ட மக்கள் தொடர்நது புறக்கணிக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது.

இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அனைவரும் சம்மாக
கவனிக்கப்பட வேண்டும். கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை, அதிக அளவில் பெருந்தோட்டத் துறையில் இருப்பதாக – உலக உணவுத் திட்டம் செப்டெம்பர் 2022க்கான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், மலையக மக்களுக்கு கோதுமை மா நிவாரணம், மண்ணெண்னை நிவாரணம், உர நிவாரணம் அரிசி நிவாரணம் உள்ளிட்ட பல நிவாரணங்கள் தற்போதைய அவசர தேவையாக இருக்கின்றன.

எனவே, இவற்றை முறையாக நடைமுறைப்படுத்த – மலையக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை அடிப்படையாககக் கொண்டு – விசேட ஆணைக்குழு அல்லது ஜனாதிபதி செயலணி அல்லது பாராளுமன்ற குழு நியமிக்கப்பட வேண்டும் என நான் இந்த சபையில் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

இதன் மூலமாவது பெருந்தோட்ட மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவோம்.” என் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here