மிரிஹானையில் 2022 மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் முதல் மே 09 தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதல்கள் வரை இடம்பெற்ற தீ வைப்பு, கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட அனைத்து வகையான சொத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் விசாரணை செய்ய, ஜனாதிபதியால் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2022 மார்ச் 31ஆம் திகதி முதல் 2022 மே 15 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற இச்சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி வழக்கறிஞர் பி.பீ. அலுவிஹாரே தலைமையிலான குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ். வசந்த குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனெக ஹேரத் இதன் செயலாளராக செயற்படுவார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளது.