மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக , சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் அறிக்கையிடப்பட்டுள்ளது.

உடல் கருகிய நிலையில் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,நேற்று  அதிகாலை   யாழ் – வல்வெட்டித்துறையில்  சடலங்கள் மீட்கப்பட்டன.

வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கை, நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தனது பெரியப்பாவின் வீட்டிலுள்ள அறையொன்றில் வசித்து வந்த 31 வயதான சரவணபவன் ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவியான 26 வயதான கிரிஷாந்தினி ரஞ்சித்குமார் ஆகியோரே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

தம்பதியினரின் அறை முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றுமொரு அறையிலும் தீ பரவியுள்ளது. அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்திய நிலையில், அறையில் உடல் கருகிய  நிலையில் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.