முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து விரட்டி விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடியேறிய சம்பவத்தினை சிங்கள வார இறுதி ஏடு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சிங்கள வார இறுதி ஏட்டின் அரசியல் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காலி முகத்திடல் மற்றும் ‘மைனா கோ கம’ வில் அலரி மாளிகைக்கு முன்பாக அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் மற்றும் கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. அந்த வகையில், முன்னாள் பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் தம்புள்ளை இல்லமும் தீயில் எரிந்து நாசமானது.

இருந்த போதிலும் ஜனக பண்டாரவுக்கு மரத்தில் ஏறி வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று ஒரு சம்பவம் இடம்பெற்றது. சொந்த வீடு இல்லாத ஜனக, தான் அமைச்சராக இருந்தபோது Skeleton வீதியில் இல. பி-20 இல் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர் அமைச்சர் பதவியை இழந்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. அதிகாரபூர்வ இல்லத்தை இழந்த அமைச்சருக்கு வேறு ஒரு வீடு கிடைக்கும் வரை அதிகாரபூர்வ இல்லத்தில் இரண்டு மூன்று மாதங்கள் வரை தங்கியிருக்கலாம்.

ஜனக பண்டார அவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பிரதமர் பதவியை இழந்த மகிந்த ராஜபக்சவுக்கு வீடு தேடி தர அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை பார்வையிட பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோர் சென்றனர். பல வீடுகளை பார்வையிட்ட பின்னர் ஐனக பண்டாரவின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் சென்று பார்வையிட்டு அந்த வீடு நல்ல நிலையில் உள்ளதால் மகிந்த ராஜபக்ச வசிக்க ஏற்ற வீடு இது என தெரிவு செய்தனர்.
அந்த வீடு முன்னாள் பிரதமரின் வசிப்பிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஜனக பண்டாரவிடம் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், அவரது உடமைகளை அகற்றுவதாக தெரிவித்திருந்தார்.

அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும்இ தனது வீடு தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதால் தாம் வாழ்வதற்கு ஒரு வீடு கிடைக்கும் வரை ஓரிரு மாதங்கள் வரை வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஜனக கேட்டுள்ளார்.

இவரின் இந்த வேண்டுகோளுக்கு இரங்காத மூத்த இராணுவ அதிகாரி தனது அதிகாரபூர்வ பதவியை பயன்படுத்தி ஜனக பண்டார இல்லாத சமயம் பார்த்து அவரது வீட்டில் இருந்த பொருட்களை வெளியே இழுத்து இரண்டு அல்லது மூன்று இராணுவ ட்ரக் வாகனங்களில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வெளியே சென்றிருந்த முன்னாள் அமைச்சர் ஜானக பண்டார அதிகாரபூர்வ இல்ல வளாகத்திற்குள் வந்தபோது,  வீட்டில் இருந்த தனது உடமைகளை இராணுவ ட்ரக் வாகனங்களில் ஏற்றிச் செல்வதைக் கண்டார். இந்த காட்சியை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீர் வரும். ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்? எனது வீடு எரிக்கப்பட்டுள்ளது. தற்போது எனது மனைவியின் சகோதரி வீட்டில் வசிக்கிறேன். எனக்கான ஒரு வீட்டை கண்டுபிடிக்கும் வரை எனக்கு சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டும் பார்த்தார்.

ஆனால்இ இராணுவ அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு அன்பான வார்த்தைகளும் கிடைக்காததால்இ அவர் தனது பொருட்களை தனது மனைவியின் சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இன்றும் கூட பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க இடமில்லை என்று ஜனக பண்டார தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்ற அமர்வில் கூட கலந்து கொள்ளவில்லை என்றும் தாம் மிகவும் மன வேதனையுடன் இருப்பதாகவும் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து தளபாடங்கள் தூக்கி எறியப்பட்டு தம்புள்ளையில் உள்ள தனது வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தால் கவலையுடன் இருந்த ஜனகவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். தீ வைக்கப்பட்ட வீடு தொடர்பில் மகிந்த வினவிய போதும்,  தான் தங்கியிருந்த அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மகிந்த ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை.

மகிந்தவுக்கு குடியிருக்க வீட்டைக் கொடுப்பதற்காக ஜனக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவ்வளவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த போது, அன்று மகிந்தவை அரச தலைவர் வேட்பாளராக முன்னிறுத்துமாறு சந்திரிக்காவுக்கு முதலில் கடிதம் எழுதியவர் ஜனக பண்டார.

இந்தக் கடிதத்தின் காரணமாக சந்திரிகாவுக்கும் ஜனகவுக்கும் இடையில் பல கடுமையான கடிதங்கள் பரிமாறப்பட்டன. மகிந்தவுக்காக அரசியலில் பெரும் தியாகங்களை செய்த ஜனக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை தொடர்பாக மகிந்த ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இது தொடர்பில் மகிந்தவிடம் எதுவும் கூறுவதில் தனக்கும் விருப்பமில்லை என்று ஜனக பண்டார தென்னக்கோன் கவலையுடன் தெரிவித்ததாக அந்த பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.