உயிரின் உயிரே…, காதல் வளர்த்தேன்.., ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி… உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடிய இந்தியாவின் பிரபல பாடகரான கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத், தனது 53 ஆவது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தா பகுதியில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிருஷ்ணகுமார் குன்னத், அங்கே பாடிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையிலே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அவரை சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதே போல, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஹிந்தியில் பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் குன்னத், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில், பாடல்களையும் பாடி உள்ளார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால் மக்களை கட்டிப் போட்டு வந்த கேகே, திடீரென உயிரிழந்துள்ளார். கேகே மறைவு குறித்து அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.