வாக்குரிமை பறிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்ட மலையக சமூகத்திற்காக நியாயம் கோருகிறேன் -முன்னாள் எம்.பி திலகர்

0
321

இலங்கையில் 8.7% சதவீதமான அங்கவீனர்களான பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய அனைத்து நியாயங்களையும் ஏற்றுக் கொண்டு ஆதரவளிக்கும் அதே வேளை, இந்திய வம்சாவளியினர் என்பதற்காக சுதந்திர இலங்கையில் குடியுரிமை மறுக்கப்பட்ட வாக்குரிமை பறிக்கப்பட்ட மலையக மக்கள் சமூகம் பல உரிமைசார்ந்த விடயங்களல அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டி, அவர்களை  இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்க வேண்டும் என கோரிக்கை வைகலகின்றேன் என முன்னாள் நுவரெலிய மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு (பவ்ரல்) அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளைப்  பதிவு செய்யும் சட்டம், அங்கவீனர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை உருவாக்கும் செயன்முறைகள் குறித்த கலந்துரையாடல் (ஜூன்17) வெள்ளிக்கிழமை கொழும்பு 6, வெள்ளவத்தை ( சபையர்) யில்  இடம்பெற்றது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்னாயக்க, பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, சிவில் சமூக செயற்பாட்டாளர் மஞ்சுள கஜநாயக்க ஆகியோரின் முன்மொழிவுகள் மீது  சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட  மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில்  கருத்து தெரிவிக்கும் போதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியல் கட்சியைப் பதிவு  செய்வது தொடர்பாக முறையான முறைமைக் கையாள்வதைக் குறிக்கோளாகக் கொண்டு அதனைச் சாத்தியாமக்க இளவயதில் இருந்தே நான்

எடுத்த முயற்சிகளை அப்போது நுவரெலிய மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராகவிருந்த தற்போதைய தேர்தல் ஆணையாளர் சமன் ஶ்ரீரத்னாயக்க இங்கே  சாட்சியாக உள்ளார். எனவே கட்சிகளைப் பதிவு செய்வதில் அதனை நிர்வகிப்பதில் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் எனபதில் நான் உறுதியாக உள்ளேன். அதே நேரம் கட்சிகளைப் பதிவு செய்யும் போது இனம், மதம், மொழி சார்ந்து அமைதல் கூடாது எனும் முன்மொழிவு சம்பந்தமாக சில விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.

இன்று அங்கவீனர்களான பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டி முன்வைக்கப்பட்ட அனைத்து  நியாயங்களையும் ஏற்றுக் கொண்டு அந்த முன்மொழிவுக்கு ஆதரவளிக்கிறேன்.  அதே நேரம் ,  இந்திய வம்சாவளியினர் என்பதற்காக சுதந்திர இலங்கையில் குடியுரிமை மறுக்கப்பட்ட, வாக்குரிமை பறிக்கப்பட்ட மலையக மக்கள் சமூகம் பல உரிமைசார்ந்த விடயங்களில் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மலையக மக்களின் மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகள் பல உள்ளன. அதனை வென்றெடுப்பதற்கான அரசியலை முன்னெடுப்பதற்கு அவர்களுக்குத் தனியான அரசியல் கட்சி தேவைப்படுகிறது.அதனை இனத்தின்பெயரில் அல்லது மதத்தின்

பெயரில் உருவாக்கப்படும் கட்சியாக பார்க்கக் கூடாது.மாறாக அடிப்படை அரசியல் உரிமை மறுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகம் ஒன்றின் அரசியலாகப் பார்க்க வேண்டும். அவர்களுக்காக தேசிய கட்சிகளோ இதர கட்சிகளோ தமது நிகழ்ச்சி நிரலில் உரிய இடம் வழங்கப்படாதபோது தமது பிரச்சினைகளுக்காக தாமே குரல் கொடுக்கும் கட்சிகளின் தேவை அங்கே நிலவுகிறது . பிரதேச சபைச் சட்டத்தில் தோட்டப்பகுதிக்கு சேவை வழங்க முடியாது என எழுதப்பட்டதைத் திருத்த எந்தத் தேசிய கட்சியும் முன்வரவில்லை. அதனைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த நாங்களே பாராளுமன்றம் வந்துதான் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதே போல தோட்டப்புறங்கள் இன்னும் முழுமையாக அரச பொதுநிர்வாக முறைமைக்குள் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக்காக உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டும் ஒரே வர்த்த மானியில் வெளியான பிரகடனத்தை காலி, இரத்தனபுரி மாவட்டத்துக்கு நடைமுறைப்படுத்தும் போது நுவரெலிய மாவட்டத்துக்கு அதனை நடைமுறைப்படுத்தாது பாரபட்சம் காட்டும் நாட்டிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே இனம், மதம், மொழி எனபாராது ஏதேனும் அடிப்படையில் ஒடுக்கப்படும் விளிம்பு நிலை மக்களுக்கான அரசியல் உரிமையை உரிய வகையில் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அங்கவீனர்களுக்கு விஷேட அடையாள அட்டை வழங்கி வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும் எனும் கோரிக்கை நியாயாமானது. அதனைச் செய்ய வேண்டும். அதே நேரம் மலையக மக்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதனைச் சுட்டிக் காட்டும் விதமாக தேசிய அடையாள அட்டையிலேயே X எழுத்து இட்ட தேசம் இது. அதனை அனைத்து மலையக மக்களுக்கும் இல்லாமல் செய்து புதிய தேசிய அடையாள வழங்கப்படுதல் வேண்டும்.

புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்படும் போது வாக்குரிமை பறிக்கப்பட்டு நாற்பதாண்டுகள் காலந்தாழ்த்தி வழங்கப்பட்டதற்கு பரிகாரமாக குறைந்த வாக்களர்களைக் கொண்ட தேர்தல் தொகுதிகள் மலையகத் தமிழர் வாழும்  பகுதிகளில் உருவாக்கப்படுதல் வேண்டும்  என்பது போன்ற கொள்கைத்

தீர்மானங்கள் எடுக்கப்படுதல் வேண்டும். வாக்குரிமை பறிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்ட சமூகத்தை அர்த்தமுள்ள இலங்கைக் குடிமக்களுக்களாக்க இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைக் கோரி நிற்பதே எனது அரசியலாகும் எனும் தெரிவித்தார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில்  கண்ணி வெடியில் காலை இழந்த அங்கவீனராகவும் ஒரு பெண்ணாகவும் மக்களை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா போன்றவர்களுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பை வழங்கி அந்த இரண்டு தரப்பும் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை . இது போன்ற விடயங்களையும் அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here