இணையத் தளத்தில் விற்பனை செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளில் பாரியமோசடி இடம்பெற்று வருவதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இணையத்தினூடாக சகல பயணச்சீட்டுகளையும் கொள்முதல் செய்யும் குழுக்கள், 2,000 ரூபா டிக்கட்டுக்களை வெளிநாட்டினருக்கு16,௦௦௦ ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையக ரயில் சேவையில் எல்ல செல்லும் ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கள், இணையத்தில் வெளியிடப்பட்டு 42 வினாடிகளுக்குள் விற்பனையாகின்றன. இவ்வாறு இந்த டிக்கட்டுக்களைப் பெறுவோர்,வௌிநாட்டினருக்கு இவற்றை அதிகூடிய விலைகளுக்கு விற்பனை செய்வதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற (15) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயணச்சீட்டு மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு இந்த மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த திகதிக்கு செல்லுபடியாகும் இணையவழி பயணச்சீட்டுகளை ஒரு மாதத்துக்கு முன்பே இணையத்தில் வெளியிடுவதாகவும், அவை வெளியிடப்பட்டு 42 வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.