இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இலங்கை மலையக வீரரான உடப்புஸலாவை எமஸ்ட் தோட்ட தேசிய, சர்வதேசிய ஓட்ட வீரர் மணிவேல் சத்தியசீலன் நான்கு தங்கப்பதக்கங்களை மற்றும் ஒரு சில்வர் பதக்கத்தை பெற்று இலங்கைக்கும், மலையகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மஹாத்மா காந்தி சர்வதேச விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்த மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையின் ஓட்ட வீரர்கள் 48 பேருடன்,இந்தியாவில் 12 மாநிலங்களை சேர்ந்த ஓட்ட வீரர்களுடன், 05 நாடுகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட ஓட்ட வீரர்களும், கலந்து கொண்டனர்.
இலங்கையில் இருந்து இந்த போட்டியில் மலையக ஓட்ட வீரராக மணிவேல் சத்தியசீலன் கலந்து கொண்டதுடன் இவர் உடப்புஸலாவை ‘ஏபர்நெட்’ ஆடைத்தொழிற்சாலை மற்றும் வலப்பனை பிரதேச சபை வழங்கிய அனுசரணையில் இந்தியா உடுப்பி மற்றும் கோவா ஆகிய இரு இடங்களில் இடம்பெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிக்கு கடந்த 09ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றிருந்தார்.
இதில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த வாரம் இடம்பெற்ற போட்டியில் 5000 மீட்டர் வேகநடை,05 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டி,1500 மீட்டர் ஓட்டப் போட்டி,4×400 மீட்டர் ரிலே ஓட்டப் போட்டி ஆகியவற்றில் நான்கு தங்கப்பதக்கங்களை பெற்ற சத்தியசீலன் 4×100 மீட்டர் ரிலே ஓட்டப் போட்டியில் சில்வர் பதக்கம் ஒன்றுமாக ஐந்து பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேலும் ஜனவரி மாதம் 2023 கோவாவில் இடம்பெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.