பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளதுடன் நாளை 09ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், இந்த திகதிகளில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை பேரணியாகச் சென்றதன் பின்னர் இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொது அமைதியை நிர்வகிக்கவும் விசேட அதிரடிப்படையினருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கட்டளைத் தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இப்பணிகளை மேற்கொள்வதற்கு அதிகளவான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.