இலங்கை வங்கிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்

0
45
Remove term: Bank of Ceylon- chairman- kavinda De Silva Bank of Ceylon- chairman- kavinda De Silva

இலங்கை வங்கியின் தலைவராக கவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், வங்கித்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தையும் முகாமைத்துவத்தில் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தையும் கொண்டவராவார்.

அண்மையில் Citibank நிறுவனத்தின் இலங்கைக்கான வியாபாரத் தலைவராகப் பணியாற்றியுள்ள கவிந்த டி சொய்சா, இந்நிறுவனத்துக்கு ஆற்றிய இரண்டு தசாப்தகால அனுபவத்தில் பெரு நிறுவனங்கள், முதலீடு, வங்கித்துறை, முதலீட்டுச் சந்தை, ஆலோசனைச் சேவை என்பன அடங்கும்.

ஒரு தசாப்தத்துக்கு மேலாக நாட்டின் முகாமைத்துவக் குழுவினதும் உறுப்புரிமை ஆளுகைக் குழுக்களினதும் முக்கிய உறுப்பினராக இருந்துள்ள சொய்சா Citibank தலைவராக இருந்தபோது, அதன் மூலோபாய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி நிறைவேற்றி பெருநிறுவன நிதி மற்றும் மூலதனச் சந்தை பரிவர்த்தனைகள் என்பவற்றை வழிநடத்தியதோடு வங்கித்துறை டிஜிட்டல் மயமாக்கலையும் ஊக்குவித்தார்.

Citigroup இல் இணைவதற்கு முன்னர் NDB வங்கியிலும் (முன்னாள் ABN AMRO), NTB வங்கி உருவாக்கப்பட்ட காலத்தில் NTB வங்கியிலும், தனது 18ஆவது வயதில் வங்கி உதவியாளராக, எழுத்தாளராக வங்கித் தொழிலை ஆரம்பித்த டி சொய்சா செலான் வங்கியிலும் பணியாற்றியுள்ளார்.

இவர், சில்லறை மற்றும் கிளை வங்கிச்சேவை, கருத்திட்ட நிதியிடல், அபிவிருத்தி வங்கியியல், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான கடன், மூலோபாய மற்றும் பெருநிறுவன திட்டமிடல், சந்தைப்படுத்தல், வங்கிச் செயற்பாடுகள், கணக்காய்வு என வங்கித்துறையின் பல்வேறு துறைகளிலும் அனுபவம் கொண்டவராவார்.

தற்போது ஐக்கிய இராச்சியத்தின் CIMA உலகளாவிய பேரவை உறுப்பினராக பதவி வகிக்கும் சொய்சா AICPA இற்கான MESANA Region REG இன் தலைவராகப் பணியாற்றியுள்ளதோடு 2011ஆம் ஆண்டிலிருந்து CIMA / AICPA இற்கான சிரேஷ்ட உலகளாவிய உறுப்புரிமை மதிப்பீட்டாளராகவும் இருந்து வருகிறார்.
இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் பிரதம பரீட்சகராகவும், மத்தியஸ்தராகவும், ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன்,  கொழும்பு பல்கலைக்கழகம், ருஹுண பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தொடர்ந்தும் சிரேஷ்ட வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் சொய்சா, இலங்கை அமெரிக்க வணிக கழகத்தின் (AMCHAM) சபை உறுப்பினராகவும் விளங்குகின்றார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர் அதற்கான தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். உலகளாவிய முகாமைத்துவப் பட்டயக் கணக்காளரான (CGMA) இவர், ஐக்கிய இராச்சியத்தின் CIMA இலங்கை வங்கியாளர் நிறுவகம் (IBSL), ஐக்கிய இராச்சியத்தின் CIM, இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவகம் (CMA) என்பவற்றின் மாணவ உறுப்பினருமாவார்.

சிக்காகோ பூத் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் கூடத்தில் தரவு மற்றும் பகுப்பாய்வுடன் முன்னோக்கிச் செல்லல் என்பது தொடர்பாக நிறைவேற்றுக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றையும் பூர்த்தி செய்துள்ள சொய்சா மொரட்டுவ புனித செபஸ்தியன் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here