எழுத்திலும் பண்பிலும் ஓர் இடைவெளியை ஏற்படுத்திச் செல்கிறார் லெனின் மதிவானம்-முன்னாள் எம்பி திலகர் இரங்கல்

0
1384

லெனின் மதிவானம் என்றதும் அவரது வசீகரிக்கும் மனிதப் பண்புகளும், காத்திரமான விமர்சன எழுத்துக்களுமே முதலில் மனதில் தோன்றும். அவரது இழப்புடன் அந்த இரண்டையுமே நாம் ஒரு சேர இழந்து நிற்கிறோம். இந்த இரட்டை இடைவெளி இலகுவில் நிரப்பபடக்கூடியதொன்றல்ல என எழுத்தாளரும் முன்னாள்  நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான மல்லியப்புசந்தி திலகர் தெரிவித்தார்.

ஹட்டன் நகரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அன்னாரது புகழுடலுக்கு மூத்த எழுத்தாளர் அல் அஸூமத் அவர்களுடன் வருகை தந்து அஞ்சலி செலுத்தியதன் பின்னர் நிவ்ஸ் இன் லங்கா செய்தித் தளத்துக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், எனது கல்லூரி, பல்கலைக்கழக நண்பர்  ட்ரொஸ்கியின்  அண்ணன் என்றே லெனின் மதிவானம் எனக்கு அறிமுகமானார். நண்பர் ட்ரொஸ்கி அழைப்பதுபோல் நானும் லெனிண்ணா என்றே அழைத்தேன். லெனின் அண்ணா என்பதன் அர்த்தம் அதற்குள் இருந்தது. ஓர் அண்ணனை இழந்த உணர்வே இன்று எனக்குள் மேலிட்டு நிற்கிறது.

இலக்கிய ரீதியாக எனக்கும் லெனின்ணாவ்வுக்கும் இடையிலான  தொடர்பு அதிகரித்தன் பின்னர் நாங்கள் .மேலும் நெருக்கமானோம். “வளர்ந்து வருகிற புதிய இலக்கிய விமர்சன செல்தெறியில் லெனின் மதிவானத்துக்கு தனியான ஓர் இடமுண்டு” என பேராசிரியர் கா. சிவத்தம்பி இதழியல் வகுப்பில் எங்களுக்கு பாடம் நடாத்திய போது லெனின்  மீதான மதிப்பு மென்மேலும் உயர்ந்தது.

எங்களுக்குள் கருத்தொற்றுமைகள் அதிகம் இருந்தன. 2012 ஆம் ஆண்டு பாக்யா பதிப்பகத்தின் ஊடாக அவரது கட்டுரைகளைத் தொகுத்து “ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ எனும் தலைப்பில் வெளியிட்டோம். கொழும்பு, ஹட்டன், பதுளை என நூலறிமுகக் கூட்டங்கள் நடாத்தினோம்.

2013 ல் தோழர் சரவணனுடன் இணைந்து ‘நமதுமலையகம்.கொம்’ இணையத்தளத்தை உருவாக்கினோம். கலாநிதி ரவீந்திரன் உள்ளிட்ட தோழர்களுடன் இணைந்து புதிய பண்பாட்டுத் தளத்தில் செயற்படத் தொடங்கினோம். ‘புதியதளம்’ எனும் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒன்றாக இருந்தோம். நூலகம் இணையத்தளத்தில் மலையக பதிப்புகளை பதிவேற்றம் செய்யும் ஆலோசனைக் குழுவில் ஒன்றாக இணைந்து செயற்பட்டோம்.

2013 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் (41) நாங்கள் இருவரும் பங்கு கொண்டதும் மலையக தேசியம் குறித்த எங்கள் இருவரதும் உரைகளும் எங்களுக்கு புதிய வெளிகளைத் திறந்தது. சகோதர முஸ்லிம், புலம்பெயர் தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரந்து விரிந்த தளத்தை அது ஏற்படுத்தியது.

45 வது இலக்கியச் சந்திப்பைமலையகம் நோக்கி நகர்த்தியதல் எனக்கும் லெனினுக்கும் பெரும்பொறுப்பு இருந்தது. வடகிழக்கு, முஸ்லிம், புலம்பெயர் இலக்கிய செயற்பாட்டாளர்கள்  கொட்டகலையில் ஒன்று கூடி உரையாடி இருந்தோம்.

மார்க்சிய திறனாய்வுச் செல்நெறி, சீனசார்பு கம்யூனிச அரசியல் பார்வை, மலையக தேசியம் குறித்த தெளிவான சிந்தனை, தோழர் ஏ. இளஞ்செழினின் முற்போக்குச் சிந்தனை என லெனின் மதிவானம் வகுத்துக் கொண்ட பாதைகளைகளில் அவர் உறுதியாகவே இறுதி வரை பயணித்ததார். அதே நேரம் புன்னகை பூத்த முகத்துடன் எளிமையாக எல்லோரிடமும் பழகும் மனிதநேயம் கொண்ட உயர்ந்த பண்பாளராகவும் அவர் திகழ்ந்ததார்.

தோழர் லெனின் மதிவானத்துக்கு ஒரு பெருங் கனவு இருந்தது. அது மலையக தேசியம் குறித்ததானது. இந்தச் சமூகபத்துக்கு நிலம் உறுதி ஆகவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் . அது குறித்த அவரது யாழ் இலக்கிய சந்திப்பு உரை பெரும் ஆதாரமாகத் திகழ்வது. தனது தந்தை ஜெயராமனின் வழிபாட்டில் தோழர் ஏ.இளஞ்செழியனின் பாசறையில் வளர்ந்த அவருக்குள் இந்தக் கனவு எழுந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது.

மலையக தேசிய இனத்திற்கு நிலம் வேண்டிநின்ற லெனின் மதிவானத்தின் உடலை எரித்துவிடாமல் இந்த மண்ணில் விதையாக புதைத்து வைத்துவிட நான் எடுத்த முயற்சி கைகூடியது  அதுவும் ஒரு மாமானிதர் நினைவுத்தூபி அருகே.

எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட நண்பர் ட்ரொஸ்கி, அம்மா தவமணி, அவரது துணைவியார் சசிகலா உள்ளிட்ட குடும்பத்தாருக்கு எனது நன்றிகளையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.  அவரது கனவை ரத்த கல்லறையில் பொறித்து வைப்போம். எமது நெஞ்சங்களில் நிறுத்தி வைப்போம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here