2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்திற்கு, தகுதியுடைய மாணவ, மாணவிகளை விண்ணப்பிக்கக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த 30 ஆம் திகதி கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
அதற்கமைய புலமைப்பரிசில் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாதாந்த குடும்ப வருமானமாக 75,000/- ரூபாவிற்கும் குறைந்தவராகவும், அரசாங்க பாடசாலையில் அல்லது எவ்வித கட்டணமும் அறவிடப்படாத பாடசாலையில் கல்வி கற்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 2021 (2022) ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதல் முறையாக தோற்றியிருப்பதுடன் ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான முழுமையான தகுதியை கொண்டவர்களாக இருப்பது அவசியமாகும்.
இதற்கமைய ஒரு கல்வி வலயத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படும்.
இது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கனவே கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதிபரிடமிருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்று தமது குடும்ப பொருளாதார நிலைமை தொடர்பான கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இம்மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஜனாதிபதி நிதியத்தின் விளம்பரம் தேசிய நாளிதழ்களான “தினமின” மற்றும் “தினகரன்” ஆகியவற்றில் நேற்று (05) வெளிவந்துள்ளன. அதற்கான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்களை ஜனாதிபதி நிதியத்தின் www. Presidentsfund.gov.lk என்ற இணையதளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.