நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையிலேயே நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை செல்லும் பிரதான வீதி நானுஓயா சந்திக்கு அருகில் மேற்படி வீதி தாழிறக்கம் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
வீதி தாழிறங்கியதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது.
தொடர் மழைக்காரணாமாக இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் , பிரதான வீதியில் வெடிப்புக்கள் உள்ளதால் வீதியினை சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது
அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிவுகள் , நிலம் தாழிறக்கம் போன்ற
சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
எனினும் நானுஓயாவில் இருந்து டெஸ்போட் வழியாக செல்லும் வீதியில் காபட் இட்டு சுமார் ஒரு வருடம் ஆனால் உரிய முறையில் சீரமைக்கப்படாததனால் தற்போது பாரிய அளவில் வெடிப்புக்கள் தோன்றியுள்ளது எனவும் குறித்த வீதியில் பயணஞ் செய்யும் கனரக வாகனங்கள் இவ்விடத்தில் விபத்திற்குள்ளாவுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த இடத்தில் விபத்தொன்று ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
டி.சந்ரு செ.திவாகரன்