இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் 96 வீதமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் இருந்து இன்று சனிக்கிழமை வெளியான சிங்கள வார ஏடொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் குறைந்தது 5-7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மைய அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர். இது இந்த நாட்டின் மக்கள் தொகையில் 26 வீதத்திற்கு சமம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் 96% குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
நாட்டின் ஒன்பது மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களில் 2,871 வீட்டு அலகுகளைப் பயன்படுத்தி அந்த அலுவலகம் இது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தியதுடன், கணக்கெடுப்பின் போது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாது விட்டால் மனிதாபிமான உதவியின் தேவை இரட்டிப்பாக 12 மில்லியனாக உயரும் என்று அலுவலகம் எச்சரித்துள்ளது.
இந்நிலைமை இலங்கை மக்களை வறுமைக்கு இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்துள்ள அலுவலகம், ஏற்கனவே இலங்கையில் குடும்ப அலகுகள் பெற்றுக் கொள்ளும் உணவின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து, அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், குடும்ப அங்கத்தினர்கள் பெறும் உணவுப் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையின்படி, இந்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்ளாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது தமது சொத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதேவேளையில், தற்போதுள்ள சிரமங்கள் காரணமாக, இலங்கையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு, அதற்கு மக்கள் பலியாவதையும் காணக்கூடியதாக உள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் அல்லது வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் குடும்ப அலகுகள் சீர்குலைந்துள்ளதாகவும் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் சுகாதார அமைப்பு தற்போது நெருக்கடியான நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.