நாவலப்பிட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையினால் ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நாவலப்பிட்ய தொடக்கம் பெலாம்பிட்டிய வரை செல்லும் நாகஸ்தன்னை ஒற்றை வழி பிரதான பாதையில் பல இடங்களில் பைனஸ் மரங்கள் சரிந்து வீதி மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இவ் வீதியூடான போக்குவரத்து (30) காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவ்வீதி ஊடாக சேவையில் ஈடுப்படும் அரசாங்க மற்றும் தனியார் பஸ்களின் சேவை பாதிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு செல்லும் நூற்றுக்கு அதிகமான மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு அதிகமான பொதுமக்களின் அன்றாட அவசர பயணங்களுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாவலப்பிட்டி தொடக்கம் நாகஸ்தன்ன வழியாக பெலம்பிட்டிய வரை செல்லும் 12 கிலோமீட்டர் ஒருவழி பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்மேடு சரிவு மற்றும் வீதி ஓர பாரிய மரங்கள் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீதி தடையை சீர் செய்ய பிரதேச மக்கள் களத்தில் இறங்கி பாடுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வீதி எந்த அரச திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் யாரிடத்தில் உதவிகளை கேட்டு வீதியை சீர்செய்து என்ற தடுமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆகையால் இவ் வீதியின் போக்குவரத்து சீர் செய்ய நாவலப்பிட்டிய பிரதேச அரசியல் வாதிகள் களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட திசைகளின் உதவியை பெற்று தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த விடயத்தில் பிரதேச மற்றும் மாவட்ட செயலகம்,பிரதேச சபை ஆகியவை கண்டும் காணாத நிலையில் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதேச மக்கள் காலம் தாழ்த்தாது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆ.ரமேஸ்