தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா 83வது வயதில் காலமானார் (27.10.1942 – 29.01.2025).
சுகையீனம் அடைந்திருந்த நிலையில் யார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாவிட்ட புரத்தில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது .
மாவை சேனாதிராஜா
மாவை சேனாதிராஜா என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.
சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார். 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார். ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13, படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.
2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின. 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.