மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் தோட்ட பகுதியில் திடீரென சுகயீனமுற்ற நபர் ஒருவர் மஸ்கெலியா வைத்தியசா லையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் அவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பதற்ற ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா வைத்தியசாலைக்கு வந்த பொதுமக்களுக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் இடையிலேயே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மஸ்கெலியா குயின்ஸ்லெண்ட் தோட்ட பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டமையினால் குறித்த நபரை உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் குறித்த நோயாளிக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வைத்தியர் இல்லை எனவும் குறித்த நபர் உயிரிழந்த பின்னரே வைத்தியர் வந்ததாகவும் உறவினர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவிக்கையில் ,
எமது வைத்தியசாலையில் அனுபவம் உள்ள உத்தியோகத்தர்கள் உள்ளனர். இந்த நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்த நிலையில் தான் கொண்டுவரப்பட்டதாக வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை டிக்கோயா கிழங்கன் வைத்திய சாலையில் இடம்பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தோடு குறித்த நபர் நெஞ்சு வருத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.சதீஸ்