மின்சார சபைக்குட்பட்ட கொத்மலை வீதியிலும் கம்பளை டாட்ரி பிரதேசத்திலும் போடப்பட்டிருந்த அலுமினிய மின்சார வயர்களை அறுத்து மின்சார சபைக்கு பதின்மூன்று இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய நுவரெலியா மின்சார சபையில் பராமரிப்பு பிரிவு ஊழியர் ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பளை மரியவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இவர் கம்பளை மின்சார பராமரிப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த நிலையில், இவ்வாறான ஒழுக்கமற்ற நடவடிக்கை காரணங்களுக்காக நுவரெலியா பராமரிப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரும், மற்றுமொருவரும் மின்சார சபை ஊழியர் பிரிவைச் சேர்ந்த சீருடை அணிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மின்சார சபையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்று இவ்வாறு மின்கம்பிகளை அறுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
வீடுகளில் மின்சாரம் இருக்கும் போது, மின்சார தூண்களில் ஏறி இவர்கள், அங்கு இழுக்கப்பட்டுள்ள மின் கம்பிகளை அறுத்து , மற்ற அலுமினிய கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.
கம்பளை டாட்ரி பகுதியிலும் கொத்மலை வீதியிலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் கம்பளை பராமரிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இது தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவியை சோதனையிட்ட போது இந்த தொழிலாளி அடையாளம் காணப்பட்டதுடன், கம்பளை பொலிஸார் அவரை கைது செய்து, வெட்டப்பட்ட நிலையில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான கம்பியை கண்டெடுத்துள்ளனர்.
மற்றைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் பத்தொன்பது வருடங்களாக மின்சார சபையில் கடமையாற்றியவர் என்பதுடன் 38 வயதான இந்த நபர் இன்று (6) கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ப்படவுள்ளனர்.
கம்பளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் பணிப்புரையின் பேரில் கம்பளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்சிறி பெர்னாண்டோ மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.ஜயந்த எஸ்.ஜ. தசநாயக்க 53793 ரூக்மன் 45203 துனுக்கர 85139 சேவியர் 6714 நில்மினி அமித் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,