முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்திருவிழா

0
65

தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும்  பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.

இன்று 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பூசம் ஆகும்.

சிறப்புக்கள்.

1. முருகப்பெருமான் பிறந்தநாள்

2. தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

3. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்

4. தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது ( வியாழன் ) மிகுந்த பலனைத் தரும் என்பர்.

தைப்பூசத்தில் தான் இலங்கை குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு  மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார்.

அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள  கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here