வெளிநாட்டில் இரண்டு வருடமாக வேலை செய்து வங்கியில் வைப்பிலிட்ட 13, இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பணத்தொகையை பெண்னொருவர் பறிகொடுத்த சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபட கீழ் பிரிவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
எலிபட கீழ் பிரிவைச் சேர்ந்த நித்தியஜோதியம்மா சுந்தரலிங்கம் என்ற பெண்ணே இவ்வாறு பணத் தொகையை பறிகொடுத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப வறுமைக்காரணமாக 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற (குவைட் நாட்டிற்கு) குறித்த பாதிக்கப்பட்ட பெண், இலங்கையில் அரச வங்கியொன்றில் இருக்கும் அவரது வங்கிக்கணக்கிற்கு மாதாந்த சம்பளத்தினை அனுப்பிவைத்துள்ளார்.
இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு 2024 04-28 நாடு திரும்பிய குறித்த குடும்பப்பெண் 30-04 -2024 அன்று குறித்த வங்கிக்கு சென்று வைப்பிலிட்ட பணத்தை மீள எடுக்கச்சென்ற போது வங்கிக்கணக்கில் 1046 ரூபா மாத்திரமே இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த குறித்த பெண் அதிர்ச்சியடைந்ததுடன் இது தொடர்பில் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார்.
இரண்டு வருடமாக வீட்டு வேலை செய்து கிடைத்த 134,400,859 ரூபாய் பணம் வங்கிக்கணக்கிலிருந்து சிறுச்சிறுக மீள பெற்றுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான் வெளிநாட்டிலிருக்கும் போது எவ்வாறு இங்கு பணத்தை என்னால் எடுக்க முடியும்? என குறித்த பெண்மணி வங்கி அதிகாரிகளுடன் முரண்பட்டு மன உளைச்சல் காரணமாக அட்டன் நகரில் பஸ்ஸில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்தப்பெண், அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ததுடன் தனது வங்கிக்கணக்கு விபரங்களை குறித்த வங்கியில் 2400 ரூபாய் கட்டணம் செலுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , குறித்த கணக்கு இலக்கித்தில் பணத்தை மீளப்பெற்ற திகதிகளில் சீ.சீ.டி.வி கமராக்களில் பதிவுசெய்யப்பட்ட, காணொளியை பரிசீலித்த போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சாயலையொத்த வேறொரு பெண்மணி பணம் மீளப்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதே வேளை, வெளிநாடு சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணான நித்தியஜோதியம்மா தான் வசிக்கும் லயத்தில் , அயல் வீட்டு பெண்ணிடம் தனது ஆள் அடையாள அட்டை மற்றும் வங்கி புத்தகத்தையும் ஒப்படைத்து விட்டு சென்றதாகவும் மீண்டும் வந்து குறித்த பெண்ணிடம் கேட்ட போது ஆள் அடையாள அட்டையை மாத்திரம் கொடுத்து வங்கிப்புத்தகம் காணாமல் போனதாகவும் தெரிவித்ததாக நித்தியஜோதிம்மா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.
இந் நிலையில் குறித்த அயல் வீட்டு பெண்மணியே ஆள் மாறாட்டம் செய்து குறித்த வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் நாவலப்பிட்டி, டிக்கோயா, அட்டன் பகுதிகளிலுள்ள வங்கிக்கிளைகளிலும் பணம் மீளப்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த வங்கி அதிகாரியொருவர் தெரிவிக்கையில் ,
நித்தியஜோதியம்மா என்பவரின் ஆள் அடையாள அட்டையிலுள்ள படம் தெளிவில்லை என்றும் அடையாள அட்டையிலுள்ள படத்தின் சாயலை கொண்ட பெண் ஒருவர் வங்கிக்கணக்கு புத்தகத்திலுள்ளவாறே கையொப்பமிட்டு பணம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
எனினும் நான் இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் குடும்ப வறுமை காரணமாக வீட்டு வேலை சென்று கஸ்டப்பட்டு சேர்த்த பணம் எவ்வாறு சரியான அடையாளம் உறுதிப்படுத்தாமால் பணத்தை வங்கி அதிகாரிகள் வேறு ஒருவரிடம் கொடுக்க முடியும் இன்று சாப்பாடு இல்லாது பட்டினியில் தவிக்கிறேன். எனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்ட பணம் முழுவதும் எனக்கு வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அட்டன் குறத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த சந்தேக நபரான குறித்த அயல் வீட்டுப்பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.