இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 115 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பை கோரியதுடன், அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதற்கமைய, இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் அதற்கு எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இவ்வாக்கெடுப்பில், ஐ.ம.ச. உறுப்பினர்கள் மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா.பொ.பெ. கட்சியைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தி கட்சியைச் (ஜே.வி.பி.) சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத், பேராசிரியர் ஹரினி அமரசூரிய ஆகிய 03 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.ஜி. பொன்னம்பலம் , செல்வராஜா கஜேந்திரன் ஆகிய 02 பேரும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

அதற்கமைய, 115 மேலதிக வாக்குகளால் 2022 இடைக்கால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் தொடர்பான அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றினார் என்பதுடன் , அதன் பின்னர் ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த ஓகஸ்ட் 31, செப்டெம்பர் 01, இன்று (02) ஆகிய தினங்களில் நடைபெற்றதையடுத்தே வாக்களிப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.