12 வரை காத்திருங்கள்- ஜனாதிபதி அறிவிப்பு

0
398

ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து பெறப்படும், மேலும் பல்வேறு விவசாய திட்டங்களின் கீழ் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எரிபொருள், எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு இன்னும் சில தினங்களில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

எவ்வாறாயினும், முழு உலகமும் எதிர்கொள்ளும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளைத் தேடுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலை நம்மைப் போன்ற பண கையிருப்பு இல்லாத நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

சர்வகட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடினார், அதற்கான பதில்கள் தோல்வியடைந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மிகவும் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் கடன் உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணியும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அரச தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும், பல நாடுகளின் தூதுவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிக்குப் பிறகு, நாடு இப்போது அதன் முடிவுகளைப் பெற்றுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

இந்திய கடன் வசதிகளின் கீழ் 65,000 மெற்றிக் தொன் உரம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 44,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நாளை (09) நாட்டை வந்தடைய உள்ளது.

 

21வது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இது நாட்டை மீண்டும் பின்னோக்கி செல்ல வைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும், தற்போதைய நிலைமையை சரியாக புரிந்து கொண்டு அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here