தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜெஜு (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 எனும் பயணிகள் விமானமானது இன்று (29) முற்பகல் 175 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 181 பேருடன் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தென் கொரியாவின் முவான் (Muan) நகரின் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது விபத்தில் சிக்கியுள்ளது. விமான விபத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தைத் தொடர்ந்து 20 இற்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் பலி எண்ணிக்கை 60 எனவும் பின்னர் தற்போது வரை 120 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவின், முவான் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 175 பயணிகளில் 2 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அறவிக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு விமானத்தை சரியாக தரையிறங்கச் செய்ய முடியவில்லை என ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் குறித்த விமானம் தரையிறங்க சற்று நேரத்திற்கு முன்னதாக அதன் எஞ்சின் விசிறிக்குள் பறவையொன்று புகுந்து தீப்பிழம்பு வெளியாகின்ற வீடியோ காட்சியொன்றும் பகிரப்பட்டு வருகின்றமையும் இவ்விபத்தின் பின்னணியாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.