பண்டாரவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த , பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தான் கண்டெடுத்த கையடக்க தொலைபேசிகள், ரொக்கப்பணம், வங்கிஅட்டைகள் என்பவற்றை உரியவரிடம் ஒப்படைத்து பெரும் பாராட்டை பெற்றுள்ளார்.

பண்டாரவளை வெலிபன்ன, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சாமிலா (6761) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே பண்டாரவளை – ஹில்ஓயா பிரதான வீதியில் தான் கண்டெடுத்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், வங்கி அட்டை, அடையாள அட்டை , சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் 142,370 ரூபா பணம் என்பவற்றை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இதனை சக பொலிஸ் உத்தியோகத்தினர் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உரிமையாளரை கண்டுபிடித்து பணம் மற்றும் அவரது அனைத்து உடைமைகளையும் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கு கெளரவத்தை ஏற்படுத்துவதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.