இலங்கையில் இருந்து தப்பியோடி சிங்கபூரில் அடைக்கலம் பெற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கோட்டாவிற்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்க முடியாது. தொடர்ந்து, சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, அவர் 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும்.

சிங்கப்பூர் அரசின் இந்தக் கோரிக்கையை அந்நாட்டு அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், கோட்டாபய ராஜபக்சவிடம் நேரில் தெரிவித்துள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

சிங்கபூரில் தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருக்கின்ற நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்றுச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், சிங்கப்பூர் அரசால் இனிப் பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறும்படி கோரிக்கை விடுத்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.