1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக 3.3 தொன் மருந்துப் பொருட்கள் கையளிப்பு

0
213

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 3.3 தொன்கள் நிறையுடைய அத்தியாவசிய மருத்துவப் பொருள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி.ஹர்ஷ டி சில்வா மற்றும் சுவசெரிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சொஹான் டீ சில்வா ஆகியோரின் பிரசன்னத்துக்கு மத்தியில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் சுவசெரிய மன்றத் தலைவர் துமிந்த ரத்நாயகவிட் ஜூன் 03ஆம் திகதி கையளிக்கப்பட்டள்ளதாக கொழும்பிலுள்ள இந்நிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2022 மார்ச் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.எஸ்.ஜெய்ஷங்கர் கொழும்பில் சுவசெரிய தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அங்கு காணப்படும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அவசர தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கு இப்பொருட்களை துரிதமாக அனுப்பி வைப்பதற்காக இந்திய கடற்படை கப்பல் கரியால் சேவையில் அமர்த்தப்பட்டது. சுவசெரிய மன்றத்திற்கு வழங்கப்பட்ட மருந்து பொருட்களுக்கு மேலதிகமாக, அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் ஐஎன்எஸ் கரியால் மூலமாக மருந்துப் பொருட்கள் எடுத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சேவையில் ஈடுபடும் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையானது இலங்கையுடன் இணைந்து இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்களை மையமாகக் கொண்டதும் தேவையின் அடிப்படையிலுமான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமையின் மிளிரும் உதாரணமாகும். இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 22 மில்லியன் அமெரிக்க டொலர் மூலமாக இந்த அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பெறுமதிமிக்க உயிர்களை காப்பதில் இந்த சேவையானது மிக முக்கியமான வகிபாகத்தை கொண்டிருப்பதுடன் இலங்கை மக்களுக்கு மிகவும் காத்திரமானதும் மகத்தானதுமான சேவையினை வழங்கிவருகின்றது.

கடந்த இரு மாத காலப்பகுதிக்குள் இந்திய அரசாங்கத்தாலும் மக்களாலும் வழங்கப்பட்ட 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் கிட்டத்தட்ட 370 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதி உடையவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மனிதாபிமான உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட அரிசி, பால்மா, மண்ணெய் போன்ற ஏனைய பொருட்கள் மற்றும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவி ஆகியவற்றுக்கு மேலதிகமாக இம்மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here