5000 ரூபாய் நாணயத்தாளில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியான தகவலையடுத்து, இவ்வாறு குறித்த நாணயத்தாளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் இன்று (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இதேவேளை இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த நாணயத்தாள் போலியானது எனவும் எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதியே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இதுவரை நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.